கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாளில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் அய்டன் மார்க்ரம் (38 ரன்), ரையான் ரிக்கெல்டன் (35 ரன்) முதல் விக்கெட்டுக்கு 82 ரன் குவித்து சிறப்பான துவக்கம் தந்தனர்.
அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 49, கேப்டன் டெம்பா பவுமா 41, டோனி டி ஜோர்ஸி 28, வியான் முல்டர் 13 ரன் எடுத்து அவுட்டாகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 81.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்திருந்தது. செனுரன் முத்துசாமி 25, கைல் வெரெய்ன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்கிறது.
* டாஸ் போட்டால் பாஸ் ஆகாத இந்தியா
தென் ஆப்ரிக்கா அணியுடனான 2வது டெஸ்டில் சுப்மன் கில் ஆடாததால், ரிஷப் பண்ட், இந்திய அணியின் 38வது கேப்டனாக நேற்று செயல்பட்டார். எம்.எஸ்.தோனிக்கு பின், கேப்டன் பொறுப்பேற்ற முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் அடைந்துள்ளார். அதேசமயம், கேப்டன்கள் மாறினாலும், டாஸில் கோட்டை விடுவது நேற்றும் தொடர்ந்தது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8வது முறையாக நேற்றும் இந்திய கேப்டன் டாஸில் வெற்றி பெறும் வாய்ப்பு கிட்டவில்லை.
* டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்ற சாந்து
டோக்கியோ: டோக்கியோவில் காது கேளாதோருக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மஹித் சாந்து பங்கேற்றார். அற்புதமாக செயல்பட்ட அவர், 45 ஷாட்டுகளுக்கு பின்னர், 456 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் அந்த பிரிவில் முதலிடம் பிடித்த சாந்து தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியாவின் டேய்ன் ஜியாங் வெள்ளி, ஹங்கேரியின் மிரா வெண்கலம் வென்றனர். டோக்கியோ டெஃப்லிம்பிக்சில் சாந்து 2வது தங்கத்தையும், ஒட்டு மொத்தமாக 4 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
* செஸ் உலகக்கோப்பை இன்று டைபிரேக்கர்
பனாஜி: செஸ் உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டியின் 2வது போட்டியில் ரஷ்யாவின் ஆந்த்ரே எவ்ஜென்யெவிச் எஸிபென்கோ-சீனாவின் வெ யி மோதினர். இப்போட்டி டிராவில் முடிந்தது. மற்றொரு அரை இறுதியில், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர்கள் ஜவோகிர் சின்டரோவ்-நோடிர்பெக் யாகுப்போவ் மோதினர். இப்போட்டியும் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இந்த போட்டிகளில் மோதிய வீரர்கள் இன்று நடக்கும் டைபிரேக்கர் போட்டிகளில் ஆட உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 24-26 தேதிகளில் நடக்கும் இறுதிப் போட்டியில் களம் காண்பர்.
