‘வந்தே மாதரம்’ என்ற போர் முழக்கம் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்’ என்ற உணர்ச்சி ததும்பும் பாடலை எழுதி, தமிழகத்தில் தெருவெல்லாம் முழங்கச் செய்தார் முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் வந்தே மாதரம் பாடலை ஊரெங்கும் ஒலிக்கச் செய்தனர்.

விடுதலைப் போரில் மட்டுமின்றி இன்றளவும் பாரத நாட்டின் ஒற்றுமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் தேசபக்த பாடலாக வந்தே மாதரம் விளங்கி வருகிறது. அத்தகைய வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆவது நமக்கெல்லாம் உவகையை ஏற்படுத்துகிறது. தேசபக்தி மிக்க வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நவம்பர் 7ம் தேதியான இன்று, வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தில் நாம் காலடி எடுத்து வைக்க உள்ளோம். வந்தே மாதரம் என்ற போர் வெற்றி முழக்கப் பாடலை நாளை அனைவரும் ஒன்று கூடி பாடுவோம். ஒவ்வொரு இல்லங்களிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கட்டும். நமது உள்ளங்களிலும் வந்தே மாதரம் பாடல் தேசபக்தியை ஒளிரச் செய்யட்டும்.

Related Stories: