சென்னை: கடந்த 2023 நவம்பர் மாதம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், கடந்த ஜனவரி 30ம் தேதி திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியத, கடந்த 2024 தேர்தலில் விதிகளுக்கு முரணாக பெரியகுளம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் வாகன பேரணி நடத்தியது என மொத்தம் 5 வழக்குகள் ஆர்.பி.உதயகுமார் மீது பதிவு செய்யப்பட்டது.
எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்.பி.உதயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இதனை விசாரித்த நீதிபதி, வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
