புதுடெல்லி: மலேசியாவில் நடக்கும்ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இதனை தவிர்த்துள்ளார். வீடியோகான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வருகிற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆசியான் இந்தியா மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக வருகிற 26ம் தேதி (நாளை) அதிபர் டிரம்ப் மலேசியா வருகின்றார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. வீடியோகான்பரன்ஸ் மூலமாக ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். மாநாட்டில் பங்கேற்றால் அதிபர் டிரம்பை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்பதால் பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரதமர் மோடி மலேசிய பிரதமரை தொடர்பு கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் அன்பான உரையாடல் நடத்தினேன். ஆசியான் மாநாட்டிற்கு மலேசியா தலைமை ஏற்பதற்காக அவரை வாழ்த்தினேன். மாநாடு வெற்றிக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொள்ளவும், விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘பிரதமர் மோடி கோலாலம்பூர் செல்வாரா மாட்டாரா என்று ஊகம் நிலவி வந்தது. இப்போது பிரதமர் செல்லமாட்டார் என்பது உறுதியாக தெரிகின்றது.
சமூக ஊடகங்களில் அதிபர் டிரம்பை புகழ்ந்து செய்திகளை வெளியிடுவது ஒரு விஷயம். ஆனால் 53 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாகவும், 5 முறை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்தாகவும் கூறிய நபருடன் நேரில் பழகுவது வேறு விஷயம். அது அவருக்கு மிகவும் ஆபத்தானது. பிரதமர் மோடி பழைய இந்தி ஹிட் பாடலான பச்கே ரே ரெஹ்னா ரே பாபா, பச்சே ரெஹ்னா ரே (கவனமாக இரு பாபா)என்பதை நினைவு கூர்ந்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
