அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காததை கண்டித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 16ல் காத்திருப்பு போராட்டம் விவசாயிகள் முடிவு

கரூர், ஆக. 14: அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து 16ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை உள்ளது. திருப்பூர், கரூர் மாவட்ட பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு அமராவதி அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் ஒத்தமாந்துறை என்ற இடத்தில் அமராவதி ஆறு வழியாக தண்ணீர் வந்து கரூர் வழியாக சென்று திருமுக்கூடலூரில் காவிரியில் கலக்கிறது. 18 வாய்க்கால்களுக்கு தண்ணீர் விடப்பட்டு சுமார் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.மேலும் அமராவதி ஆற்றங்கரையோரம் கரூர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் கிணறுகளை அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றன. அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டது. இதற்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது அமராவதி அணையில் இருந்து 2வது முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 11ம் தேதி முதல் 25ம் தேதி தேதி 15 நாட்களுக்கு நீர் திறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தின்படி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முறையிட வந்தனர். கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷை சந்தித்து பேசினர். தண்ணீர் திறக்காமல் புறக்கணிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமராவதி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் கூறியது:கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி முறையிட்டோம். கடந்த 8 மாதமாக தண்ணீர் திறக்கவில்லை, இப்போது அமராவதி திருப்பூர் மாவட்ட புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். 40 ஊராட்சிகளுக்கு இங்கு குடிநீருக்கே தட்டுப்பாடு என கேட்கின்ற நிலையில், தமிழக முதல்வர் திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் பாசனத்திற்குதிறக்க அரசாணை வெளியிட்டுள்ளார். கலெக்டர் வேலையாக வெளியே சென்றிருப்பதால் டிஆர்ஓவிடம் முறையிட்டோம்/77அடி தண்ணீர் இருக்கும் நிலையில் திறந்துவிடவில்லை. ஒவ்வொரு வருடமும் புறக்கணித்து வருகின்றனர். போராடி போராடி எங்களது வாழ்வாதாரமே போராட்டமாக ஆகி விட்டது. நாளை திறப்பதாக கூறியுள்ளனர். திறந்தால் மகிழ்ச்சி, இல்லாவிட்டால் 16ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இங்கே சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது, அதுவரை இங்கேயே இருப்பது என முடிவு செய்துள்ளோம்.

கடைமடை வரை தண்ணீர் சேரும் வகையில் திறந்து விட வேண்டும். 35 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி உள்ளது. தண்ணீர் கொடுக்காததால் 50 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.பள்ளபாளையம் ராஜவாய்க்கால் சங்கம் ராமசாமி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 40 ஊராட்சிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆண்டாங்கோயில் கீழ்பாகம், மேல்பாகத்தில் சுமார் 60 ஆயிரம் மக்கள் உள்ளனர்.காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இல்லாததால் அமராவதி நீரை நம்பியேஉள்ளனர். மாதக்கணக்கில் நீரின்றி உப்பு தண்ணீர் கூட கிடைக்கவில்லை, இங்கு குடிநீருக்கு திறக்காமல் அங்கு பாசனத்திற்காக முதல்வர் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். 77 அடி தண்ணீர் அணையில் இருந்தும் குடிநீருக்கு தவிக்கின்றனர்.

10 ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறோம். கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அங்கு அரசை, ஆட்சியாளர்களை நிர்ப்பந்தித்து, அமைச்சர்களை வைத்துக்கொண்டு தண்ணீர் திறக்கின்றனர். பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது. காவிரிக்காக குரல் கொடுக்கும் அரசில் மாவட்டத்திற்கு இடையே பாரபட்சத்தை ஆட்சியாளர்கள் கடைபிடிக்கின்றனர். உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தங்கி போராட்டம் நடத்துவோம்.காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை தண்ணீர் திறக்கவேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும். இது என்ன நீதி. உரிமையை நிலைநாட்ட அமைச்சரும், ஆட்சியாளர்களும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் இன்று தண்ணீர் வரும் என கூறினார். ஆனால் வரவில்லை என்றார்.

Related Stories: