அஞ்சூரில் கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்க வேண்டும் விவசாயிகள் எதிர்பார்ப்பு

க.பரமத்தி,பிப்.13: மாவட்ட எல்லை பகுதியான அஞ்சூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி கருவேயம்பாளையம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் இரு போக நெல் நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது.

இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த முதலாம் போக நெற்கதிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.  நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும், பெய்தமழை நீரை கொண்டும், கீழ்பவானி பாசன வாய்க்கால் நீரை கொண்டும் அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர் ஆகிய ஊராட்சிகளில் ஏராளமான ஏக்கரில் நெல் நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயராக உள்ளன. மற்ற இடங்களில் இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவடை செய்த நெல்லை வெளி மாவட்ட பகுதியான முத்தூர் அல்லது கொடுமுடி பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதனால் வாகன செலவு, காலவிரயம் என விவசாயிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும், இடைத்தரகர்கள் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் பெரும் விரக்தி அடைகின்றனர்.

எனவே, கரூர் மாவட்ட எல்லை பகுதியான அஞ்சூர் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எனவே அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: