விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைதளத்துடன் இணைப்பு பாலம்: அமைச்சர் எ.வ.வேலு 26ம்தேதி ஆய்வு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கண்ணாடி தரைதளத்துடன் விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைய உள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரும் 26ம் தேதி ஆய்வு செய்ய உள்ளார்.   கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.27.96 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை  டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மே 4ம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பணிகளின் விவரங்கள், பணிகளின் தோராயமான மதிப்பு, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14ம் தேதி முதல் அரசு இணையதளத்தில் https://tntenders.gov.in/  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டெண்டரில் ஏதேனும் மாற்றங்கள், திருத்தங்கள் இருந்தால், அது அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாலம் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் அலங்கார நுழைவு வாயில் இடம்பெறும். அருகே குதிரைகளின் சிற்பம் இடம்பெறும். மேலும் பாலத்தின் தரைதள பகுதிகள் சறுக்கும் தன்மை இல்லாத கண்ணாடி தளம் அமைக்கப்படும். பாலத்தின் இருபுறமும் ஓய்வெடுப்பதற்கான பெஞ்ச் வசதி செய்யப்படும். ஆர்ச் வடிவில் இடம்பெறும் இந்த பாலத்தில் அலங்கார விளக்குகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாலம் அமைய உள்ள பகுதிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்ய உள்ளார். நாளை (25ம் தேதி) கோவில்பட்டியில் நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு இரவு கன்னியாகுமரி வரும் அவர் 26ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இணைப்பு நடைபாலம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பார்வையிடும் அவர் பிற்பகல் 2.30 மணிக்கு பத்மநாபபுரத்தில் புராதன கட்டிடங்களை பார்வையிட்டு இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்….

The post விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைதளத்துடன் இணைப்பு பாலம்: அமைச்சர் எ.வ.வேலு 26ம்தேதி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: