வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயம்: இருவர் சஸ்பெண்ட்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில்,  பசுமை வீடு, ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், ஒன்றிய அரசின் தொகுப்பு வீடு உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்கு வாலாஜாபாத் பழைய பிடிஓ அலுவலகத்தில் இருந்து சிமென்ட், கம்பி, கதவு, ஜன்னல் உள்பட கட்டுமான பொருட்கள் விநியோகிப்பது வழக்கம். கடந்த  சில மாதங்களாக கட்டுமான பணிகளுக்கு பயன்படும் கம்பிகள் குறைந்துள்ளன. இதுகுறித்து, கிடங்கு கண்காணிப்பாளர் சசிகலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட பொறியாளர்கள் நேற்று, கம்பிகளின் எடையை கணக்கிட்டனர். அப்போது, 21 டன் கம்பிகள் குறைவாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கிடங்கை கண்காணித்த சில கண்காணிப்பாளரிடம் விசாரித்தார். பின்னர், மாவட்ட நிர்வாகத்துக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் கிடங்கு கண்காணிப்பாளர் கவுரிசங்கர், தற்போதைய கிடங்கு கண்காணிப்பாளர் சசிகலா ஆகியோர், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பணியிடை நீக்கம் செய்து, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக,  வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் வாலாஜாபாத் போலீசில்  புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கம்பிகள் எப்படி மாயமானது, அதை எடுத்து சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். 21 டன் கம்பி காணாமல் போன சம்பவம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயம்: இருவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: