மாடுகளுக்கு கன்றுவீச்சு நோய் தடுப்பூசி போடும் பணி நாளை துவக்கம்

 

கோவை, பிப்.14: கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு பிரதான தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கால்நடைகளில் பல்வேறு நோய் தாக்கம் ஏற்பட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடைகளில் ஏற்படும் ‘புருசெல்லா’ என்ற கன்றுவீச்சு நோய்க்கு மூன்றாம் கட்டமாக நாளை (15ம் தேதி) முதல் மார்ச் 15ம் தேதி வரையில் தடுப்பூசி போட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. நோய் பாதித்த கால்நடைகள் உணவு உட்கொள்ளாமலும், பால் உற்பத்தி குறைந்தும், சினை பிடிக்காமலும், கன்றுவீச்சு மற்றும் விரை வீக்கம் காணப்படும்.

பொருளாதார இழப்பை தவிர்த்திடும் வகையில் 4 லிருந்து 8 மாத வயதுடைய பெண் பசு மற்றும் எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்நோயிலிருந்து காப்பாற்றுவதோடு இந்நோய் மனிதர்களுக்கு பரவுவதை முற்றிலும் தவிர்க்கலாம். எனவே, தகுதியான கன்றுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மாடுகளுக்கு கன்றுவீச்சு நோய் தடுப்பூசி போடும் பணி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: