பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர்,செப்.20: பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (சப்.கலெக்டர்) அலுவலகம் முன்பு, நேற்று(19ம்தேதி) மாலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொழில் நுட்ப உபகரணங்கள் இன்றியும், மதிப்பூதியம் ஏதுமின்றியும், முழுமையான வடிவம் பெறாமல் இருக்கும், டிசிஎஸ் எனப்படும் டிஜிட்டல் கிராஃப் சர்வே செயலி மூலமாக பதிவு செய்யச் சொல்வது, ஏற்கனவே பெரும் பணிச் சுமையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மென்மேலும் பணிச் சுமையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ள இயலாது என்பதால்,

டிஜிட்டல் கிராஃப் சர்வே பணியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டாரங்களும்இணைந்து பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 16 பெண்கள் உள்பட 84 பேர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: