அரியலூர், செப்.12: தொடக்கக் கல்வியை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் தேவைப் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி செப்.10 அம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இயக்கத்தினர், அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கருணாநிதி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் எழில், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
The post தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் appeared first on Dinakaran.