பள்ளிக் கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகத்தில், ‘நம் பள்ளி, நம் பெருமை’ என்ற பெயரிலான  புதிய செயலி (App) ஒன்றை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது. அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிமுகப்படுத்தினார். மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும் திட்டக் கையேடு அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான கையேடுகள் வெளியிடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் பரப்புரைப் பாடல் வெளியிடப்பட்டது.   தமிழகம் முழுவதும் 4 பேர் கொண்ட 500 கலைக் குழுக்கள் கிராமங்களில் 15 நாட்கள் பயணம் செய்து பரப்புரைப் பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: நம் பள்ளி; நம் பெருமை’ என்ற திட்டத்தின் மூலம், ஏற்கெனவே உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை எப்படி மேம்படுத்துவது, அது குறித்து எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது  என்பதற்கான பரப்புரையை தொடங்கி  வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொலைக் காட்சி விளம்பரமும்,  வெளியிடப்பட்டது. அதற்கான புதிய செயலியும் வெளியிடப்படுகிறது. பள்ளி வராத குழந்தைகளுக்கு இது பெரிய அளவில் உதவும். இதில் பெற்றோர் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நிதியில் இருந்து இதற்கு செலவிடப்படும். பொதுத் தேர்வு மே மாதம் நடக்கும் நிலையில், 6-9ம் வகுப்புக்கும் மே மாதம் நடத்துவது குறித்து பலர் கேள்வி எழுப்பினர். கொரோனா பாதிப்பில் காலம் தள்ளி தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கேற்ப இந்த ஆண்டு மட்டும் இப்படி நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டில் முறையாக உரிய காலத்தில் நடத்தப்படும். மாறுதல் ஆணை பெற்று செல்லும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பணிகள் பாதிக்காத வகையில் கற்றல் பணிகளை தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் உள்ளூரில் உள்ள கட்சியினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் தலையிடுவதாக புகார்கள் வரும்பட்சத்தில், முதல்வர் தெரிவித்தபடி பாரபட்சம் இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் தலையீடு பள்ளிக் கல்வித்துறையில் இருக்கக் கூடாது என்பது  தான் இந்த ஆட்சியின் நோக்கம். உண்மை இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, அரசியல் தலையீட்டை தவிர்த்து பள்ளிகள் தன்னிறைவு அடைய பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்….

The post பள்ளிக் கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: