ஆழ்கடலில் ரோபோ இயக்கும் போட்டி விஐடி மாணவர்கள் சாதனை

சென்னை: நார்வே நாட்டில் நடந்த ஆழ்கடலில் ரோபோ இயக்கும் போட்டியில் விஐடி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்று நிபுணத்துவம் அடையும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப சிறப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்களில் உள்ள மாணவ, மாணவிகள் உலகளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில், நார்வே நாட்டின் ரோகாலாந்த் நகரத்தில் செயல்பட்டு வரும் டவ் தன்னாட்சி மையம் நடத்திய கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்கும் போட்டிகள் கடந்த வாரம் நடந்தது. இதில் விஐடி சென்னை பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் அணியின் முனைவர் கருணாமூர்த்தி தலைமையில் மாணவர் தலைவர் ேஹமந்த் உள்ளிட்ட 20 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 13 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த குழுவினர் கடலுக்கு அடியில் எண்ணெய் குழாய்களை ஆய்வு செய்தல், பொருட்களை அடையாளம் காணுதல், வால்வுகளை இயக்குதல், பொருத்தும் நிலையத்தை வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் சென்னை வி.ஐ.டி. மாணவர் அணி 2ம் இடத்தை பிடித்தது. இந்த மாணவர்களை நார்வே நாட்டிற்கான இந்திய தூதர் அகினோ விமல், தூதரக அலுவலர் பிரேம் பிரகாஷ் ஆகியோர் பாராட்டினர். அதேபோன்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியா திரும்பிய மாணவர்களை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், இணை துணை வேந்தர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஆழ்கடலில் ரோபோ இயக்கும் போட்டி விஐடி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: