தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம்

சென்னை: தேசிய அளவிலான தனிநபர் செலவுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் தமிழ்நாடு குறித்த பிரத்யேக தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. நம்முடைய நாட்டில் தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு அறிக்கையாக வெளியிடப்படுவது வழக்கமாகும். இதுபோன்று ஆண்டுதோறும் வெளியிடப்படும், செலவின அறிக்கையானது, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும், அவர்களின் வறுமை நிலையையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது.

அந்தவகையில், 2022-23ம் ஆண்டு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்தும் சில தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதில், இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773ஆக உள்ள நிலையில், நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459ஆக உள்ளது. தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில், சில மாநிலங்களே உள்ளன. இதில், தமிழ்நாடும் ஒன்றாகும். கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.

இதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர்ப்புறத்தில் சராசரியாக ஒருநபரின் செலவினம் ரூ.7,630ஆகவும், கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆகவும் உள்ளது.

அதாவது, தேசிய அளவில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் வெறும் 44 சதவீதமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது கல்விதான். தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களுக்கும் போதுமான அளவு கல்வி கிடைக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. அதனால், தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினங்கள் உள்ளன.

அதேபோல, கலாச்சார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை முந்தைய காலத்தில் குறைவாக இருந்தன. ஆனால், இப்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த துவங்கவிட்டனர். மொத்தத்தில், இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றத்தை கண்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம் appeared first on Dinakaran.

Related Stories: