திருவேற்காட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்

சென்னை,: திருவேற்காட்டில் தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர்திருவிழா நடைபெறும். இந்தாண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து விழாவை துவக்கிவைத்தார். பின்னர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு திரையையும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்துவைத்தார். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட முக்கிய மாடவீதிகள் வழியாக தேர்சென்றது. வழிநெடுகிலும் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் தேர் கோயில் அருகேயுள்ள நிலை நிறுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. திருவேற்காடு, பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், மாங்காடு, குன்றத்தூர், வானகரம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்றுக்குப்பிறகு 2 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில், வேலூர் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் டெக்கான் மூர்த்தி, அறங்காவலர்கள் கோவிந்தசாமி, சந்திரசேகர், வளர்மதி, சாந்தகுமார், கோயில் துணை ஆணையர் ஜெயப்பிரியா, திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ், கோயில் கோட்ட பொறியாளர் கண்ணன், கோயில் மேலாளர் மலைச்சாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், உதவி கோட்ட பொறியாளர் முரளி, மின்சார வாரியம் உதவி பொறியாளர் அர்ஜுனன், திருவேற்காடு வியாபாரிகள் சங்கத்தலைவர் அருணகிரி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post திருவேற்காட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: