திருப்புவனம் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

திருப்புவனம், பிப். 10: திருப்புவனம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியகுழு தலைவர் தூதை சின்னையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆணையாளர் அருள்பிரகாசம் வரவேற்றார். அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. அப்போது கவுன்சிலர் சுப்பையா, லாடனேந்தல், மடப்புரம் ஊராட்சிகளை திருப்புவனம் பேருராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடுவதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அந்த திட்டத்தை கைவிடவேண்டும். ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கவுன்சிலர் ஈஸ்வரன் பேசும்போது, பழையனூர் பகுதியில் அடிக்கடி மின் விநியோகம் தடையாகிறது. மின் விநியோகம் சீராக இருக்க பழையனூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். இதற்கு ஆணையாளர் இத்திட்டம் குறித்து மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பதிலளித்தார். கவுன்சிலர் ராமு பேசும்போது, நெடுங்குளம் நெடுஞ்சாலையில் இருந்து பொட்டப்பளையம் ஊராட்சி கீழக்கரிசல் குளம் – பெரியார் நகர் வரை 4.200 கி.மீ சாலை மிகவும் பழுதாகி உள்ளது. இதனை தமிழக நெடுஞ்சாலை துறையில் சேர்க்க வேண்டும் என்றார். இதுதொடர்பான தீர்மானத்தை நெடுஞ்சாலை துறைக்கு அனுப்புவோம் என ஆணையாளர் கூறினார். முடிவில் துணைத்தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.

The post திருப்புவனம் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: