சென்னையில் மழைக்கு இருவர் உயிரிழப்பு; வீட்டின் சன்ேஷடு இடிந்து பெண் சாவு, மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

பெரம்பூர்: புளியந்தோப்பில் கன மழையின் காரணமாக  வீட்டின் சன்ேஷடு இடிந்து விழுந்து காய்கறி வியாபாரம் செய்யும் பெண் பரிதாபமாக பலியானார். இதுபோல, மின்சாரம் பாய்ந்ததில் வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். சென்னையில் மழைக்கு ஒரே நாளில் இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனி பகுதியை சேர்ந்தவர் கபாலி (50). இவரது மனைவி சாந்தி (45) இருவரும் காய்கறி வியாபாரிகள். இவர்களுக்கு மன வளர்ச்சி குன்றிய விதயா (22), மணிகண்டன் (20) என 2 குழந்தைகள். இவர்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். நேற்று காலை 8 மணி அளவில் சாந்தி தனது வீட்டு அடி பம்ப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னலின் மேல் பக்கவாட்டில் உள்ள சன்ேஷடு சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சாந்தி தலையில் பலத்த காயமடைந்து துடிதுடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ரத்தம் அதிகம் வெளியேறியதால் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளரான மணவாளன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மணவாளன் வீட்டில் 8 குடும்பங்கள் தனித்தனியாக வசித்து வருகின்றன. திங்கட்கிழமை முதல் சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் பால்கனி உள்ளிட்ட இடங்கள் ஈரத்தன்மையுடன் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. வியாசர்பாடி பி.வி காலனி 25வது தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (52), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும் கவுதம், கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆட்டோவை புளியந்தோப்பில் விட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.பி.வி காலனி 18வது தெருவில் இறப்பிற்கு ஒரு வீட்டில் பந்தல் போட்டு இருந்தது. அதை தாண்டி தேவேந்திரன் வரும்போது அதிகப்படியான மழை பெய்ததால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. பந்தல் போடப்பட்டிருந்த சாமியானா கம்பியை பிடித்துள்ளார். அதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டித்தனர். தகவலறிந்த எம்கேபி நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் தேவேந்திரனை மீட்டபோது அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, தேவேந்திரனின் மகன் கவுதம், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் குறிப்பிட்ட பகுதியில் சாமியானா பந்தல் அமைத்த மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மழைநீரில் மின்சாரம் கசிந்து தேவேந்திரன் உயிரிழந்தாரா அல்லது சாமியானா பந்தல் அமைத்த கம்பியில் மின்சாரம் கசிந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.சென்னையில் மழைக்கு பெண் மற்றும் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  …

The post சென்னையில் மழைக்கு இருவர் உயிரிழப்பு; வீட்டின் சன்ேஷடு இடிந்து பெண் சாவு, மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: