கோவையில் மின் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கீட்டில் விதிமீறல் புகார்

 

கோவை, ஜூலை 24: கோவையில் அடுக்குமாடி கட்டிடங்கள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கியதில் விதிமீறல் நடைபெற்று உள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு சென்னையில் உள்ள மின்வாரிய தலைவர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளார்.

இதில், கோவை மின் பகிர்மானத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், வர்த்தக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உயர் அழுத்த மின்சாரம் மற்றும் கூடுதல் மின் திறன் கேட்கும் விண்ணப்பதாரர்களுக்கு மின் டிரான்ஸ்பார்மர்கள் ஒதுக்குவதில் வரிசைப்படி மின் மாற்றி ஒதுக்கீடு செய்து மின் இணைப்பு வழங்குவது வழக்கம். ஆனால், கோவை மாநகர வட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக கட்டிடங்களுக்கு வரிசைப்படி மின் மாற்றி ஒதுக்கீடு செய்யாமல் முறைகேடாக மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் மின்மாற்றி இல்லாமல் மின் இணைப்புக்கு காத்திருப்பவர்களை தனியார் நிறுவனங்களிடம் மின் டிரான்ஸ்பார்மர்களை பெற்று வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் பல லட்ச ரூபாய் செலவு செய்து மின்மாற்றி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பண்டகசாலையில் இருந்து 63 கிலோ வாட், நூறு கிலோ வாட், 230 கிலோ வாட் ஆகிய மின்மாற்றிகளை வரிசைப்படி காத்திருப்பவர்களுக்கு அளிக்காமல் சிலருக்கு முன்னுரிமை அளித்து மின் மாற்றி ஒதுக்கீடு செய்துள்ளது தெரியவருகிறது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்டும் தகவல் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பீளமேடு கிழக்கு பிரிவு அலுவலகம் மையக்கோட்டம், நகரிய கோட்டம் ஆகிய பகுதிகளுக்கு வரிசைப்படி மின் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கீடு செய்யாமல் சிலருக்கு முக்கியத்துவம் அளித்து மின் டிரான்ஸ்பர் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் மின் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கி செய்யப்பட்டது குறித்து பண்டகசாலை உள்ள பதிவேடுகள் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் மின் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கீட்டில் விதிமீறல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: