காடையாம்பட்டி அருகே சமையல் கூடமாக மாறிய அரசுப்பள்ளி வகுப்பறை-குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர் எச்சரிக்கை

காடையாம்பட்டி :  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோவிந்தகவுண்டனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரங்கப்பனூர், மயில்காடு, மலைபெருமாள் கோவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 48 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளியில் இரண்டு கட்டிடம் மட்டுமே உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியையாக பிரியா என்பவரும், வசுமதி என்ற ஆசிரியை என இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு தயாரிக்க ஒதுக்கப்பட்டிருந்த கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள், சமையல் கூடத்தை இடித்து அகற்றினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரத்தடியில் வைத்து உணவு தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். அவ்வாறு உணவு தயாரிக்கும் போது மரத்தில் இருந்து பூச்சிகள் உணவில் விழும் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம், வகுப்பறையில் ஒரு பகுதியை ஒதுக்கி சமையல் கூடமாக மாற்றினர். மாணவர்கள் ஒரு பகுதியில் அமர்ந்து படிக்க, மற்றொரு பகுதியில் காஸ் சிலிண்டர் மூலம் உணவு சமைத்து வருகின்றனர். மேலும், சிலிண்டர்கள் பலவற்றை வகுப்பறையில் வைத்துள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த பள்ளிக்கு சமையல் கூடம் தனியாக கட்ட ₹4.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால், மாணவர்கள் சாலையில் நின்று காலையில் இறைவணக்கம் பாடுகின்றனர். அவ்வழியாக வாகனங்கள் வந்து செல்கிறது.எனவே கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும். சமையல் கூடம் கட்ட வேண்டும். இப்பணிகளை வரும் 25ம்தேதிக்குள் மேற்கொள்ளாவிடில், மறுநாள் 26ம் தேதி முதல் பள்ளியில் பயிலும் தங்களின் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர் எச்சரிக்கை விடுத்துள்னளர். …

The post காடையாம்பட்டி அருகே சமையல் கூடமாக மாறிய அரசுப்பள்ளி வகுப்பறை-குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: