ஆன்லைன் ஆப் மூலம் 1 லட்சம் பேரிடம் 300 கோடி மோசடி: ரியல் எஸ்டேட், பாதுகாப்பு வாய்ந்த முக்கிய துறைகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்த அதிர்ச்சி தகவல்: சீனர்கள் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை:  சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ‘ஆன்லைன் ஆப் லோன்’ மூலம் மிரட்டப்படுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பெங்களூரில் செயல்பட்டு வந்த கால்சென்டரை கண்டறிந்து, அதை நடத்தி வந்த 2 சீனர்களான ஜீயோ யமாவோ(38), வூ யானுலம்(23) மற்றும் அவர்களது பங்குதாரர்கள் பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் குறுகிய காலத்தில் 1 லட்சம் பேருக்கு 36 சதவீத வட்டியில் கடன் கொடுத்து 300 கோடி வரை வசூலித்து பணபரிவர்த்தனை சட்டத்தை மீறி செயல்பட்டது தெரியவந்தது.  இந்த பணம் அனைத்தும் சட்டவிரோதமாக சீனாவுக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனது விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சீனாவை சேர்ந்த ஜீயோ யமாவோ(38), வூ யானுலம்(23) மற்றும் அவர்களுக்கு உதவிய பெங்களூரை சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் 2 சீனர்கள் உட்பட 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பேரையும் நேற்று முன்தினம் முதல் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: “இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சீனாவில் உள்ள ஹாங்க் என்பவர் இந்தியா முழுவதும் மண்டலம் வாரியாக கால் சென்டர் தொடங்கி அதற்கு இயக்குநர்களாக சம்பந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களை பணி அமர்த்தியுள்ளார். அந்த கால் சென்டர்களை கண்காணிக்க ஒரு சென்டருக்கு 2 சீனர்கள் வீதம் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட சீனர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக 36 சதவீதம் பணம் லாபம் ஈடுட்டியுள்ளனர். மோசடியில் கிடைத்த பல நூறு கோடி பணத்தை  பெரிய பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ேமலும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள நபர்கள் குறிப்பாக சீனர்கள் இந்தியாவில் அவ்வளவு எளிதில் அலுவலகம் தொடங்கி விட முடியாது. இதற்கு பின்னணியில் பலர் உள்ளனர்.  எனவே, சீனர்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் அலுவலகங்கள் தொடங்கி சிறிய முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் ஈட்ட உதவி செய்த நபர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் சீனாவில் உள்ள ஹாங்க்கை கைது செய்ய சட்ட நிபுணர்களுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்….

The post ஆன்லைன் ஆப் மூலம் 1 லட்சம் பேரிடம் 300 கோடி மோசடி: ரியல் எஸ்டேட், பாதுகாப்பு வாய்ந்த முக்கிய துறைகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்த அதிர்ச்சி தகவல்: சீனர்கள் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: