நில தகராறில் பயங்கரம்; நள்ளிரவில் தலை துண்டித்து முதியவர் கொடூர கொலை: மைத்துனர் மகன் அதிரடி கைது


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம், ஆத்தனஞ்சேரி கிராமம், மரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தயாளன் (60). டீசல் பம்ப் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு, செல்வி என்ற மனைவியும், சக்தி, ஹரிகோபால், சிவா என 3 மகன்களும், சூர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், 2 மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், 3வது மகனுக்கு திருமணம் செய்ய தயாளன் முடிவு செய்து, அதற்காக பெண் பார்த்து வருகின்றனர். அதற்கு முன்பாக அவருக்கு புதிதாக ஒரு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்த தயாளன், ஆத்தனஞ்சேரி பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த, வீட்டின் அருகே உள்ள காலி நிலம் பங்கிட்டு தருவதில் தயாளனின் மகன்களுக்கும், செல்வியின் அண்ணன் மகன்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக இருவரின் குடும்பத்திற்கும் இடையே அவ்வப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், புதியதாக கட்டி வரும் வீட்டின் வாசல் முன்புதான், நேற்று முன்தினம் வழக்கம்போல தூங்கியுள்ளார். நேற்று காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, தயாளன் தலை துண்டிக்கப்பட்டு, கை, வயிற்று பகுதியில் பலத்த வெட்டு காயத்துடனும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தயாளனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தயாளன் மனைவியின் அண்ணன் மகன் பார்த்திபன் (30) என்பவனை, போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நில தகராறில் பயங்கரம்; நள்ளிரவில் தலை துண்டித்து முதியவர் கொடூர கொலை: மைத்துனர் மகன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: