மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி: சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் கவியரசு(25). இவரது தம்பி பாலாஜி(19). இவரது நண்பர் காரம்பாக்கம் அருணாச்சலம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன்(20). இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பாலாஜியின் வீட்டு வாசலில் அமர்ந்து பாலாஜியும் முருகனும் மது குடித்துள்ளனர். இதை பார்த்த பாலாஜியின் அண்ணன் கவியரசு இருவரையும் கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து, பாலாஜியை கவியரசு மிகவும் கடுமையாகவும் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், என் நண்பனை என் முன்னாலேயே திட்டுகிறாயா, உன்னை சும்மா விட மாட்டேன் என்று, கவியரசையும் அவரது பெற்றோரையும் ஆபாசமான வார்த்தையில் திட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

பின்னர், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கவியரசுவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார். அந்த சத்தம் கேட்டு கவியரசு மற்றும் அவரது பெற்றோர்கள் வெளியே வந்து பார்த்தபோது முருகன் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடுவது தெரிந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிய முருகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

The post மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: