மது அருந்தியபோது தகராறு: நண்பனை கொன்று புதைத்த 3 வாலிபர்கள் கைது


செங்கல்பட்டு: மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பனை கொன்று புதைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மறைமலைநகர் என்எச்2 சீதக்காதி தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் விக்கி என்ற விக்னேஷ் (27). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை தங்கராஜ் மறைமலைநகர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் விசு என்ற விஸ்வநாதன் (27), கோகுலாபுரம் சந்துரு (26) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கேஷ் குமார் (27) ஆகியோர் சம்பவத்தன்று நண்பர் விக்னேஷை மது அருந்துவதற்காக கோவிந்தாபுரம் ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது விக்னேஷிற்கும் விசுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி விசுவை விக்னேஷ் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த விசு அருகில் உள்ள தனது வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் விசு, தில்கேஷ்குமார், சந்துரு ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்னேஷின் உடலை ஏரியின் அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில், தனிப்படை போலீசார் கோகுலபுரம் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். விக்னேஷின் உடலை நாளை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் விசு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மது அருந்தியபோது தகராறு: நண்பனை கொன்று புதைத்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: