போலீஸ் முத்திரையை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் உட்பட 3 பேர் கைது: போலீஸ் விசாரணை

குமரி: பொதுமக்கள் தங்கள் சொத்துகளின் ஆவணங்கள் தவறிவிட்டாலோ அல்லது இயற்கை பேரிடர்களால் சேதமடைந்தாலோ அதற்குறிய நகலை பெறுவதற்கு சில நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. அதன்படி, செய்திதாள்களில் விளம்பரம் கொடுத்து அதனை காவல்நிலையத்தில் காட்டி அங்குள்ள ஆய்வாளர் மூலமாக அனுமதி பெற்று அதனை பத்திரபதிவு அலுவலகத்தில் கொடுத்து நகல் பெற்றுகொள்ளலாம்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து பூதப்பாண்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளரின் முத்திரையை போலீயாக தயார் செய்து, அதனை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயார் செய்து கொட்டாரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இந்த போலீ ஆவணங்களை சமர்பித்து பத்திரநகல்களை பெற்று பொதுமக்களிடம் விநியோகித்து வந்துள்ளனர்.

இந்த மோசடியானது சுமார் 2 வருடங்களாக நடந்துவந்துள்ளது. இது தொடர்பாக நேற்று கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு சந்தேகம் வந்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் இது தொடர்பாக எந்த ஒரு ஆவணமும் வழங்கவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குமரி மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் இந்த மோசடியில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதும், இதன் மூலம் பலகோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை பிடித்து பூதப்பாண்டி காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் முத்திரையை போலியாக தயார் செய்த முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போலீஸ் முத்திரையை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் உட்பட 3 பேர் கைது: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: