கொலை உள்பட 50 வழக்குகளில் தொடர்புடையவர் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி விற்ற அதிமுக பிரமுகர் அதிரடி கைது: 20 ஏக்கர் நிலம் வாங்கிய திடுக் தகவல் அம்பலம்

சேலம்: கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி விற்ற அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொலை உள்பட 50 வழக்குகளில் தொடர்புடைய அவர் மீது 3 முறை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ள நிலையில், 40 லிட்டர் சாராயத்துடன் அவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம்தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 59 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் மதுவிலக்கு வேட்டை நடத்தினர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் ரூரல் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் கல்லாநத்தம் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சாராய வியாபாரி சுரேஷ்(எ)சுரேஷ்குமார்(எ) கல்லாநத்தம் சுரேசை(40) போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 40 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதிமுகவை சேர்ந்த இவர், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது 50க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளது. மேலும் வழிப்பறி, அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகளும் இருக்கிறது. தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்த இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மணப்பாச்சி என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாராயம் விற்பனை செய்த பணத்தில் நிலத்தை வாங்கியுள்ளார்.இவர் கல்வராயன் மலையில் மணப்பாச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளார். அங்கிருந்து சாராயத்தை கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் பகுதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததால் அவர் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளச்சாராயம் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொலை உள்பட 50 வழக்குகளில் தொடர்புடையவர் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி விற்ற அதிமுக பிரமுகர் அதிரடி கைது: 20 ஏக்கர் நிலம் வாங்கிய திடுக் தகவல் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: