குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகன் படுகொலை: தந்தை, இளையமகன் கைது


பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60). இவரது மூத்த மகன் விஜய்(35). இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான விஜய் வீட்டில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஜய் திடீரென இறந்து விட்டதாக கூறி நெருங்கிய உறவினர்களை மட்டும் வரவழைத்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், செட்டியார் அகரம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து விஜய் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய மர்ம நபர், விஜய் தானாக இறக்கவில்லை. அவரது குடும்பத்தினரே கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கூறப்பட்டது. இதையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் தலைமையில் சென்ற போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொலை செய்ததை ஆசைமணி ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரது தந்தை ஆசைமணி, இளைய மகன் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகன் படுகொலை: தந்தை, இளையமகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: