மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

* வடக்கு கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

பெ.நா.பாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோவை வடக்கு கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சி சார்பில் கூ.கவுண்டம்பாளையம் வடக்கு தோட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைய உள்ள இடத்தின் அருகே 3 மழை நீர் தடுப்பணைகள் அமைந்துள்ளன.

இந்த தடுப்பணைகளால் மழைக்காலங்களில் வடியும் மழை நீர் சேகரமாகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு,இங்கு தேங்கும் தண்ணீரை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி,மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அருந்தி செல்லும் இடமாக இருந்து வருகிறது.இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது.

இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் குடிநீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றின் தரம் குறைதல், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை விவசாயிகள், வனவிலங்குகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும் என விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வினோத்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில் ‘‘கோவை கூடலூர் நகராட்சி சார்பில் கூ.கவுண்டம்பாளையம் வடக்கு தோட்ட பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பட்சத்தில் அருகில் உள்ள தடுப்பணையில் சேகரமாகியுள்ள மழை நீர் மாசுபடும்.

காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதோடு வனவிலங்குகளின் தண்ணீர் தேவை அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் அருகில் உள்ள விளைநிலங்களை நாடிவரும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: