திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஏரி, கிணறுகளில் தண்ணீரின்றி விவசாயம் கடுமையாக பாதிப்பு: ஆடி மாதத்தில் நடவு செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள்

திருப்போரூர்: பருவமழை பொய்த்ததையடுத்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆடி மாதத்தில் நடவு செய்ய முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 60 சதவீத நிலங்கள் விவசாயத்தையே நம்பி உள்ளன. சென்னையை ஒட்டி அமைந்துள்ளதால் வேறு வழியின்றி பல்வேறு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன. நகர மயமாக்கலின் காரணமாக ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என ஒருபுறம் வளர்ச்சி இருந்தாலும், இன்னும் விவசாயத்தை விடாமல் பிடித்திருக்கும் விவசாயிகளால் இந்த மாவட்டத்தில் ஓரளவுக்காவது விவசாயம் நடைெபற்று வருகிறது.

இந்நிலையில். கடந்த ஆண்டு முறையாக பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்ததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பவே இல்லை. குறிப்பாக, மாவட்டத்தின் பெரிய ஏரிகளாக சிறுதாவூர் ஏரி, தையூர் ஏரி, கொண்டங்கி ஏரி, பொன் விளைந்த களத்தூர் ஏரி போன்றவை நிரம்பி வழியவே இல்லை. இந்த ஏரிகள் நிரம்பி வழிந்தால்தான் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தற்போது ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை தொடங்க வேண்டிய விவசாயிகள், ஒரு செடி நடக்கூட தண்ணீர் இல்லாமல் வானம் பார்த்து காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏரி நீரை எதிர்பார்த்து விவசாயம் செய்யும் நன்செய் நிலங்களுக்குத்தான் இந்த நிலை எனில், கிணற்று நீரில் விவசாயம் செய்யும் புன்செய் நிலங்களும் கிணறுகள் வறண்டு விட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு போய்விட்டது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியை செயல்படுத்த முடியாமல் விவசாயிகள் 100 நாள் கூலி வேலைக்குச் சென்று 150 ரூபாய் பணத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு மாறி விட்டனர். சொந்த நிலம் இருந்தும் பருவமழை பெய்யாததால் ஏரி, கிணறுகள் வறட்சி ஆகியவற்றால் கூலியாளாக மாறி விட்ட கொடுமை விவசாயத் தொழிலில் மட்டுமே உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள் அவர்களது தொழிலை செய்ய முடியாத 2 மாதங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்கின்றன. ஆனால், இந்த சமூகத்திற்கு உணவு அளிக்கும் விவசாயிகள், தனது நிலத்தில் விவசாயப் பணியை செய்ய முடியாமல் போனதற்கு உரிய நிவாரண உதவியை கேட்டுப் பெற முடியாத நிலையில் இருப்பது வேதனையின் உச்சம். திருப்போரூர் ஒன்றியத்தில் இள்ளலூர், வெண்பேடு, காயார், காட்டூர், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, பூண்டி, எடர்குன்றம், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம், தண்டலம், சிறுதாவூர், ஆமூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர், சிறுங்குன்றம், மேலையூர், நெல்லிக்குப்பம், கொண்டங்கி, வெங்கூர், காரணை, குண்ணப்பட்டு போன்ற கிராமங்களும், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் எச்சூர், கடம்பாடி, மணமை, நெரும்பூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், இரும்புலிச்சேரி, எடையாத்தூர், பாண்டூர், விளாகம், வல்லிபுரம், வழுவதூர், நரப்பாக்கம், பட்டிக்காடு, ஈகை, முள்ளிக்கொளத்தூர், சோகண்டி, பொன் விளைந்த களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இன்றும் 80 சதவீதம் பேர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்த, கிராமங்களில் சிலவற்றில் மூன்று போக விவசாயமும், சில கிராமங்களில் இரண்டு போக விவசாயமும் நடைபெற்று வந்தது. தற்போதைய நிலையில் ஒரு போக விவசாயத்தை கூட செய்ய முடியாத நிலைக்கு தங்களை இயற்கை தள்ளி விட்டுள்ளது என விவசாயிகள் தங்கள் குமுறலை தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளும் தவிப்பு
விவசாயம் செய்ய முடியாமல் போனது ஒரு பக்கம் இருக்க, விவசாயம் செய்தால் மட்டுமே அதை சார்ந்து வாழும் கால்நடைகளுக்கான தண்ணீர், உணவு, வைக்கோல் உள்ளிட்டவற்றை தர முடியும். விவசாயம் இல்லாததால் ஆடு, மாடுகளும் போதிய உணவு, தண்ணீர் இன்றி தவிக்கின்றன என்று விவசாயகள் தங்களின் கையறு நிலையினை வெளிப்படுத்துகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அடுத்த ஆண்டு பெய்ய உள்ள பருவமழை தங்களை கைவிடாது என்று தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்திய விவசாயிகள், அதற்குள் ஏரிக்கு நீர் வரும் நீர் வரத்து கால்வாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கையான ஆக்கிரமிப்புகள், ஏரிக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
பல்வேறு ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் இருந்து குப்பைகள், கழிவுநீர் ஆகியவற்றை ஏரிகளில் கொட்டும் போக்கை கண்காணித்து அவற்றை தடை செய்து, அதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: