*புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அவலம்
ஸ்பிக்நகர் : தூத்துக்குடி முள்ளக்காடு, பண்ணைவிளை, கயத்தாறு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு- அத்திமரப்பட்டி சாலையில் செல்லும் பைப்லைன் மூலம் அத்திமரப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏரல்: மங்கலக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உறைகிணறு அமைக்கப்பட்டு 90 கிராம கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை வழியாக சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதே வழித்தடத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் சாயர்புரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் பண்ணைவிளை கோழிக்கடை அருகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த தண்ணீர் சாலையோரத்தில் தேங்கி சாக்கடையாகி மாறி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சி மற்றும் கடம்பூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் குழாயில், கயத்தாறு – கடம்பூர் சாலையில் அமைந்துள்ள கோவிந்தாப்பேரி குளத்தின் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
குழாய் உடைப்பில் வெளியேறும் குடிநீர், குளத்தில் உள்ள பள்ளங்களில் மழை பெய்தால் நிரம்புவதுபோல் தேங்கியுள்ளது. ஏற்கனவே கடம்பூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீருடன் உள்ளூரிலேயே போர் போடப்பட்டு ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரையும் கலந்துதான் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
எனினும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் தண்ணீர் குறைந்து வரும் சூழலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதே தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இதுபோன்று ஆங்காங்கே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குழாய் உடைந்து குடிநீர் வெளியேறுவதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் அலட்சியம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. ஆனால் இதனை கண்டுகொள்ள யாரும் இல்லை.
தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது வேதனை அளிக்கிறது. மக்களுக்கு அறிவுரை கூறும் அதிகாரிகள், இதுபோன்று அலட்சியமாக இருக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்’ எனறனர்.
