*கவுன்சிலர்கள் வாக்குவாதம்
வாணியம்பாடி : வாணியம்பாடி நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் கயாஸ் அகமத், பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.இக்கூட்டத்தில் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப்பேசினர்.
அப்போது 17, 25, 33 உள்ளிட்ட வார்டுகளின் உறுப்பினர்கள் பேசுகையில், `எங்கள் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் குடிநீர் தொட்டி, தார்ச்சாலை, சிறுபாலம் (கல்வெர்ட்) உள்ளிட்ட அடிப்படை பணிகள் குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வார்டு பகுதிகளில் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தூவுவது இல்லை. தெருநாய் தொல்லை அதிகரித்து அடிக்கடி நாய்க்கடி சம்பவங்கள் நடந்து வருகிறது என பேசினர். இதனிடையே நகரமன்றக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ஏன் வரவில்லை? எனக் கூறி நகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில், நகராட்சி அலுவலகம் அருகே சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிழற்கூடம், பயணிகள் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டிருந்தன.
தற்போது அந்த கழிப்பறை கட்டடத்தை ஜேசிபி மூலம் இடித்து அகற்றிவிட்டு, அப்பகுதியில் நகராட்சி சார்பில் புதிய வாடகை கடைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வாணியம்பாடி நகரமன்ற உறுப்பினரும், திமுக நகரச்செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
