*10க்கும் மேற்பட்டோருக்கு ஒளி கிடைத்தது
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் கடந்த இரு நாட்களில் உயிரிழந்த 2 சமூக ஆர்வலர்களின் கண்கள் தானம் மூலம் 10க்கும் மேற்பட்டோர் மறு வாழ்வு பெற்றனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மனோகரன் (70) நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இதேபோல மற்றொரு சமூக ஆர்வலர் பவானி மணி (72) நேற்று காலை மாரடைப்பால் காலமானார். இருவரும் கொரோனா காலங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கியதில் பெரும் பங்கு வகித்தனர்.
இதேபோல மாசடைந்து வரும் பவானி ஆற்றை மீட்டெடுக்கும் பணியிலும் முழு பங்கு வகித்தனர். மேலும், மேட்டுப்பாளையம் நலன் சார்ந்த பல்வேறு இயக்கங்களிலும் தங்களை ஈடுபடுத்தி முழு அர்ப்பணிப்புடன் பணி புரிந்தவர்கள். இந்த நிலையில் இருவரது கண்களும் அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்துடன் கண் தானம் செய்யப்பட்டன.
இதில் மனோகரனின் கண்கள் கோவை தனியார் கண் மருத்துவமனைக்கும், மணியின் கண்கள் மற்றொரு கண் மருத்துவமனைக்கும் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 10க்கும் மேற்பட்ட பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இறந்தும் பலருக்கு மறுவாழ்வு அளித்த சமூக ஆர்வலர்கள் சமூகத்தில் முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.
