குஜிலியம்பாறை வார்டுகளில் தான் இந்த அவலம் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பாதிப்பு

*கால்வாய் வசதி அமைத்து தர கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் மழை பெய்யும் நாட்களில் கழிவுநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. இதுமட்டுமின்றி கால்வாயில் குழாய் உள்ளதால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீரை அகற்றுவதுடன், கால்வாய் வசதியும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாளையம் பேரூராட்சிக்குட்பட்டு குஜிலியம்பாறையில் 8, 11, 12, 13, 4 ஆகிய வார்டுகள் உள்ளன. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் முறையாக செல்வதற்கு வடிகால் வசதி இதுவரை இல்லை. அதேபோல் குஜிலியம்பாறை மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் வெளியேருவதற்கும் கால்வாய் வசதி இல்லை.

இதனால் மழை பெய்யும் நாட்களில் குஜிலியம்பாறை கோட்டை மேட்டு சாலை, காளியம்மன் கோயில் சாலை, மணப்பாறை சாலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும், கழிவுநீருடன் கலந்து 11வது வார்டு காளியம்மன் கோயில் எதிரே மணப்பாறை சாலையில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. குடியிருப்புகளில் புகுறம் கழிவுநீரால் இப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர்.

வீடுகளில் புகும் கழிவுநீரால் இரவு நேரங்களில் வீடுகளில் தங்கி இருக்க முடியாமல், குடும்பங்களுடன் காளியம்மன் கோயில் எதிரே உள்ள திறந்தவெளி நாடக மேடையில் தங்கும் அவல நிலை உள்ளது. இது மட்டுமின்றி இக்குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கிபடியே கிடக்கிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில்தான் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வப்போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் இப்பகுதி மக்கள் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குஜிலியம்பாறையில் 11வது வார்டு குடியிருப்பில் கழிவுநீர் வசதி ஏற்படுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி கூறியதாவது: குஜிலியம்பாறையில் 11வது வார்டு மணப்பாறை சாலை முதல் சுடுகாடு சாலையில் பாறை அடிவாரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. குடியிருப்புகளை சுற்றி குளம் போல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று பரவி, பலதரப்பட்ட நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதில் நோய் பாதிப்பால் சிலர் இறந்து போயும் உள்ளனர். மேலும் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கழிவுநீரில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால், சில நேரங்களில் கழிவுநீருடன் கலந்து வரும் குடிநீரை குடிக்கும் அவல நிலை உள்ளது.

குஜிலியம்பாறையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் முன்பாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படும் என பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நான்கு வழிச்சாலை திட்டம் முடிவடைந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் திட்டம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கழிவுநீர் கால்வாய் திட்டம் நிறைவேறும் என காத்திருந்த இப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் இப்பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால் நாள்தோறும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பாளையம் பேரூராட்சியில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் 450 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் 11வது வார்டு குடியிருப்பு மக்களின் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கழிவுநீர் கால்வாய் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத பட்சத்தில் இப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு விரைவில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

Related Stories: