ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய சிறப்புக்குழு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களை கருணைக்கொலை செய்வது தொடர்பாக சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி, கனிராவுத்தர் குளம், சூளை, பி.பெ.அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை, கருங்கல்பாளையம், மரப்பாலம், ஸ்டோனி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட பிராய்லர் கோழி மற்றும் ஆடு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளில் இருந்து அதிகமான இறைச்சி கழிவுகள், சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி, சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், தெருநாய்களின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வில்லரசம்பட்டி, கருவியல் பாறை வலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒரு பசு, 250க்கும் மேற்பட்ட கோழிகளை, தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தன. மேலும், சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் தாக்கி வருகின்றன.

இறைச்சி கடைகளின் முன்பு கூட்டமாக நின்று, அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் கடித்து வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தினமும் 25 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்படுகிறது. பின்னர், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள், 4 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, பிறகு அதே இடத்தில் கொண்டு வந்துவிடப்படுகிறது. இருப்பினும், தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 10 முதல் 15 பேர் நாய் கடிக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் 2 ஆயிரம் பேருக்கு நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், இதேபோன்று காயம் அதிகமாக ஏற்பட்டு இருந்தால், இம்மினோகுளோபினிங் என்ற ஊசி மாதந்தோறும் 250 பேருக்கு போடப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, சுமார் 24 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் 10 ஆயிரம் இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை சட்டபூர்வமாக நடக்கிறதா? என்பதை கண்காணிக்க, மாநகராட்சி ஆணையர், கால்நடைத்துறை இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. அந்தந்த பகுதிகளுக்கே நேரடியாக சென்று, தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், தீராத நோய் பாதிப்பு ஏற்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவுள்ளது. அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களை கருணைக்கொலை செய்வது தொடர்பாக சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

50 இடங்கள் ஒதுக்கீடு

ஈரோடு மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மோகன்தோட்டம் பகுதியில் விலங்குகள் பராமரிப்பு மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்கு நோய் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் தங்க வைத்து பராமரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: