பருவமழை நீரை சேமிக்க பிடமனேரி ஏரிக்கு நீர் வரும் கால்வாயை தூர்வார வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி : பருவமழை நீரை முழுமையாக சேமிக்க, பிடமனேரி ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரியில் ஓராண்டு சராசரி மழையளவு 760 மி.மீ ஆகும். தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில், இலக்கியம்பட்டி ஊராட்சியில் பிடமனேரி ஏரி உள்ளது.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இந்த ஏரிக்கு பதிகால்பள்ளம் வனப்பகுதியில் இருந்தும், சோகத்தூர் பகுதியில் பெய்யும் மழை நீரும், ஏஎஸ்டிசி நகர் வழியாக பிடமனேரி ஏரிக்கு கால்வாய் வழியாக வந்தடைகிறது.

ஏரி நிரம்பியதும், ராமாக்காள் ஏரிக்கு மறுகால் வழியாக செல்கிறது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏரிகள், குளங்கள், விவசாய கிணறுகள் மற்றும் அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டு விட்டன.

இந்த நிலையில் ஏரிகளில் கருவேல மரங்கள், முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் பிடமனேரி ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை முற்றிலுமாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: