குன்னூர் : குன்னூர் மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுக்கடைகள் ஒதுக்கியும் மின்சாரம் இன்றி வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி சார்பில் முதற்கட்டமாக ஐயுடிபி காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்த கடைகள் இடிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால், அங்கு நீண்ட நாட்களாக வியாபாரம் செய்து வந்த சுமார் 16 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக குன்னூர் மார்க்கெட் பகுதியிலேயே தற்காலிகக் கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அண்மையில், மார்க்கெட் பகுதியில் நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தால் சில கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். அவ்வாறு சீல் வைக்கப்பட்ட கடைகளை, தற்போது ஐயுடிபி காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட வியாபாரிகளுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் தற்போது வழங்கப்பட்டுள்ள மாற்றுக்கடைகள் நீண்ட நாட்களாகப் பராமரிப்பு இல்லாமல் பூட்டிக் கிடந்ததால், அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய வியாபாரிகள் அந்த இடங்களுக்கு சென்று தங்களது வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால், கடைகள் ஒதுக்கப்பட்டு, வியாபாரம் செய்ய நினைத்தாலும் தற்போது வரை அங்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால் போதிய வெளிச்சமும், அடிப்படை வசதிகளும் இன்றி வியாபாரிகள் பெரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பாதிப்படைந்த வியாபாரிகள் கூறுகையில், ‘‘நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு மாற்றுக்கடைகள் வழங்கி உதவியதை வரவேற்கிறோம். ஆனால், மின்சார வசதி இல்லாததால் எங்களால் முழுமையாக வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் சேவை மூலம் இயங்கும் தையல் இயந்திரங்களை இயக்க முடியாமல் தையல் தொழிலாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த கடைகளுக்கு மீண்டும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’’என்றனர்.
