வராத தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பு
*பொதுமக்கள் குற்றச்சாட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், வராத தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் முட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு, ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் அளவீட்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் பதிவாகும் நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தாலும், பல இடங்களில் மீட்டர் பதிவின் அடிப்படையில் இல்லாமல் தோராயமாக கட்டணம் விதிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
மேலும் 1,000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஒரு ஊராட்சியிடம் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதே நேரத்தில், ஊராட்சிகள் தங்களது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மோட்டார் இயக்குவதற்கான மின்கட்டணத்தையும் தனியாக செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கூட்டு குடிநீர் வழங்கப்படுவதாக கணக்கில் காட்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் ஒரு நீர்த்தேக்க தொட்டிக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது.
பைப்லைன் உடைப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகமே சொந்த செலவில் போர்வெல் மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறது.
அதற்காக மின்கட்டணமும் தனியாக செலுத்த வேண்டியுள்ளது. அதே நேரத்தில், வராத தண்ணீருக்கு கூட்டு குடிநீர் திட்ட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். மேலும் செயல்படாத நீர்த்தேக்கத் தொட்டிகளும் கணக்கில் சேர்க்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதுபோல கஞ்சன் கொல்லை, மா.ஆதனூர், சிறுகாட்டூர் உள்ளிட்ட சில ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படாமல் மாதம்தோறும் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஊராட்சிகளின் பொதுநிதி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 1,000 லிட்டருக்கு சுமார் ரூ.15 வரை கட்டணமும் ஒரு ஊராட்சிக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சராசரியாக ஒரு ஊராட்சிக்கு ரூ.25,000 என 40 ஊராட்சிகள் பயன்பெறுவதாக கருதினால் மாதத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் வரை வசூலிக்கலாம்.
அதுபோல ஆண்டிற்கு இது சுமார் ரூ.1.20 கோடி வரை இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, நீர் அளவீட்டு மீட்டர் பதிவுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, வராத குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, செயல்படாத நீர்த்தேக்க தொட்டிகள் கணக்கில் காட்டப்படுகிறதா என்பன குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையெனில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
