*ஆற்காடு அருகே சோகம்
ஆற்காடு : ஆற்காடு அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய பள்ளி மாணவன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புதுப்பாடி உள்வட்டம், அனத்தாங்கல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காட்டிற்கு குடிவந்து அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது மகன் தருனேஷ் (16) ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அனத்தாங்கல் சென்று கிணற்றில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் அந்த ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாணவன் தருனேஷ் கிணற்றில் மூழ்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஊருக்குள் ஓடி சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆற்காடு தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து நிலைய அலுவலர் பரிமளா தேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய மாணவன் தருனேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து தகவலறிந்த தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளர் ராமு, விஏஓ வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் 4 நீர் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வடிய வைத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மாணவன் தருனேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து சடலத்தை போலீசார் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
