*இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூராவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன.
மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது.
தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கால நிலை மாற்றத்தினை சீர்செய்வதில் அலையாத்திக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களை தாங்கி அரணாக விளங்கி வருவதால் ஒவ்வொரு பேரிடரின் போதும் இந்த அலையாத்திக்காடு பெரிதாக பாதிப்படைகின்றன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த முனங்காடு, தொண்டியக்காடு, மேலத் தொண்டியக்காடு, தில்லைவிளாகம் தெற்கு, போன்ற கிராமங்களும் அதோடு ஒட்டி இருக்கிற நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும், பஞ்சநதிக்குளம் – நடுச்சேத்தி, தென்னடார், வாய்மேடு போன்ற ஊர்களும் கடினல்வயல், பன்னாள், ஆயக்காரன்புலம்-4 கடற்கரையை ஒட்டி இருக்கிற உப்பளப் பகுதிகள் ஆகும்.
இந்த ஊர்களுக்கு தெற்கே பார்த்தால் பெரிய உப்பளங்களும், சதுப்பு நிலங்களும், அதற்கடுத்து கடலும் அமைந்திருக்கிறது. இதனால் கடலில் இருந்து வரும் புயல் காற்று, உப்பங்காற்று போன்ற இயற்கை பேரிடர்களை இந்த ஊர்கள் தான் நேரடியாக எதிர்கொள்கின்றன.இற்போது அரசாங்க உத்தரவுப்படி நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி வருகிறார்கள்.
இன்னும் தீவிரமாக உத்தரவு போட்டு ஒரு கருவேல மரம் கூட இருக்கக்கூடாது என்று மொத்தமாக வெட்டிவிட்டால், அந்த இடம் முழுவதும் சுத்தமாக வெட்டவெளியாக மாறிவிடும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அது கடலோரக் கிராமங்களுக்குப் பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்.
அதனால் கருவேல மரங்கள் எந்த அளவுக்கு அகற்றப்பகிறதே அதைவிட கூடுதலாக அதற்கு மாற்றாக அலையாத்தி மரங்கள், இப்பகுதிகளில் வளர்க்க வனத்துறையும் அதை இயக்கும் அரசும் முன்வரவேண்டும் என இயற்க்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து இயற்கை ஆர்வலர் தென்னடார் அசோக் குழந்தைவேல்கூறுகையில்:
இந்த கடற்கரை கிராமங்களையும் அப்பகுதி மக்களையும் அப்பகுதி இயற்கை வளங்களையும் பாதுக்காப்பது முக்கிய கடமை அதன் வகையில் இந்த விசயத்தில் நமது தலைமுறை இந்த மண்ணில் வாழவேண்டும் என்றால் “வருமுன் காப்பது சிறந்தது” என்ற தொலைநோக்கு பார்வையோடு நாம் இதை அணுக வேண்டும். கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கு முன்பாகவே, அதற்கு மாற்றாக அந்த இடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் சரி செய்ய வேண்டும்.
கருவேல மரங்களை வெட்டுவதற்கு முன்னெச்சரிக்கையாகவே, உப்பளங்களின் ஓரங்களிலும், முகத்துவாரப் பகுதிகளை ஒட்டிய அந்த உப்பு மண்ணில் வளரக்கூடிய சதுப்புநிலத் தாவரங்களை (அலையாத்தி மரங்கள், தில்லை போன்ற மரங்களை) நடுவதற்கு அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாற்று மரங்களை முன்கூட்டியே நட்டு ஓரளவுக்குப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிய பிறகு, இந்த கருவேல மரங்களை வெட்டினால் நமக்கு எந்தப் பயமும் இருக்காது.
எனவே, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் வனத்துறையும் சேர்ந்து, கருவேல மரங்களை ஒழிக்கும் தீவிரத்தோடு அதே வேகத்தில் இந்த மாற்று மரங்கள் நடும் திட்டத்தையும் முன்னெச்சரிக்கையாக உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
விவசாய நிலம் உப்பாகி விடும்
கடலில் இருந்தும் உப்பளத்தில் இருந்தும் வீசும் பலத்த காற்றையும் உப்பங்காற்றையும் கருவேல மரங்கள் தடுத்து ஒரு தற்காலிக இயற்கை அரணாகப் பாதுகாத்து வருகின்றன. இந்த மரங்களை எல்லாம் முற்றிலும் வெட்டிவிட்டு வெட்டவெளியாக மாற்றினால், ஆடிக்காற்று வீசும்போது உப்பளத்தில் இருக்கும் உப்பு மண்ணும் உப்புக்காற்றும் எவ்விதத் தடையும் இல்லாமல் கிராமங்களுக்குள் நுழையும். இந்த உப்புக்காற்று கடலோரக் கிராமங்களைத் தாண்டி உள்நிலப் பகுதிவழியாக வடக்கே பல கி.மீ தொலைவு வரைப் போகும்.
இதனால் விவசாய நிலங்கள் எல்லாம் உப்பாகி, நெல் விவசாயம் செய்ய முடியாமல் முற்றிலும் பாதிக்கப்படும். அதுமட்டும் இல்லாமல், இந்தக் காடுகளில் வாழும் காட்டுப்பன்றி, முயல், நரி, மான், போன்ற விலங்குகளுக்கும், மயில், போன்ற பறவையினங்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.
