அன்னூர்: அன்னூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தவெக பெண் நிர்வாகியையும், அவருடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலனையும் அரிவாளால் வெட்டிய மாஜி கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையத்தில் வசிப்பவர் முருகானந்தம். இவரது மனைவி அன்பு மலர் (41). அன்னூர் தவெக நிர்வாகி. இத்தம்பதியர் கடந்து 4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்தனர்.
அன்பு மலர் தனது குடும்பத்துடன் கூத்தாண்டவர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அன்னூர் பகுதியில் கட்டிட வேலை செய்யும் கும்பகோணத்தை சேர்ந்த மோகன் குமார் (32), அன்பு மலர் குடும்பத்தினருடன் கடந்த ஒன்றரை வருடமாக நண்பராக பழகி வந்துள்ளார். விவாகரத்து பெற்றாலும் முருகானந்தம் அவ்வப்போது அன்பு மலர் வீட்டிற்கு வந்து செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மதியம் அன்பு மலரை பார்க்க முருகானந்தம் வந்துள்ளார். அப்போது மோகன் குமார், அன்பு மலர் ஆகிய இருவரும் ஒன்றாக படுக்கையில் அமர்ந்து உணவு சாப்பிட்டிருந்தனர்.
இதை பார்த்து ஆவேசமடைந்த முருகானந்தம் அரிவாளால் அன்பு மலர் மற்றும் மோகன் குமாரை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு, தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.
