மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தும், வீட்டிற்குள் அடைத்து வைத்தும் துன்புறுத்திய தொழிலதிபர் மீது சிங்கப்பெண் சிறப்பு படைக்கு புகார் அளித்தும் ரெஸ்பான்ஸ் இல்லை என மதுரையில் இளம்பெண் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 2023ல் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அலுவலக வரவேற்பாளராக பணியாற்றினார். பெற்றோர் இல்லாத நிலையில் உறவினர்களின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். விடுதியின் உரிமையாளரான தொழிலதிபர், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக அவ்வப்போது கூறி நெருங்கிப் பழக முயற்சி செய்துள்ளார். இதனை அந்தப்பெண் கண்டித்துள்ளார். கடந்த 2024ல் விடுதியில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு இரவு வீட்டிற்கு வருமாறும், குடும்பத்தாருடன் இருப்பதால் பயமின்றி வரலாம் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி அந்தப் பெண், அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உரிமையாளர் மற்றும் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் கொடுத்த தண்ணீரை குடித்தப்பிறகு அந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணை ஆடையில்லா கோலத்தில் புகைப்படம் எடுத்தும், பாலியல் துன்புறுத்தலும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்தப் பெண்ணிடம் அவரது ஆபாச படங்களை காட்டி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக ெதாழிலதிபர் மிரட்டியுள்ளார். அடியாட்களை வைத்தும் மிரட்டியுள்ளார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் உயிருக்கு பயந்து அந்தப் ெபண், வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஏப். 30ம் தேதி, மதுரை பைபாஸ் சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று 4 நாட்களாக தொழிலதிபர் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அப்போது பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்தப்பெண், காவல்துறை உதவி எண் 100க்கு போன் செய்துள்ளார். ஆனால் போலீசார் முறையாக விசாரிக்காமல், வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த மே 16ல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், எந்த மேல் நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது. எனவே, தனக்கும், தனது உறவினர் குடும்பத்திற்கும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்; வீடியோக்களை அழிக்காமல் வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அந்த பெண், கூறுகையில், ‘‘புகார் அளித்தபாது போலீசார், தொழிலதிபருக்கு ஆதரவாக பேசினர். பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை திரும்பப் பெறுமாறு கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட எனக்கு ஆதரவாக போலீசார் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை போலீசாரே உருவாக்குகின்றனர். பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் படை மற்றும் காவல்துறையினர் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டபோது எந்தவித ‘ரெஸ்பான்ஸ்சும்’ இல்லை. அவர்கள் கொலை செய்து விடுவார்கள் என்ற பயம் உள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
