காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சமந்தாபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு இருந்த பார் உரிமம் புதிப்பிக்காமல் இருந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மூடப்பட்டது. தற்போது கடையில் இருந்த கேமராக்கள் மற்றும் பொருட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஜாபர்சாதிக் (60), என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் வல்பூரான் (62), இவரது மகன் தவெக நிர்வாகி கார்த்திக் (34), தாளக்கரை பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி பிரகாஷ் (34), முத்துக்குமார் (32) ஆகிய 4 பேர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தனர். தொடர்ந்து, பூட்டப்பட்டிருந்த பாரில் ஓசி தண்ணீர் பாட்டில் கேட்டு ஜாபர்சாதிக்கிடம் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், காவலாளியை பலமாக தாக்கினர்.
இதுகுறித்து, பார் உரிமையாளர் மருதமுத்துக்கு (35), ஜாபர்சாதிக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த மருதமுத்து ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அப்போது, ஆத்திரமடைந்த 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருதமுத்துவை சரமாரியாக குத்தினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், 4 பேரும் தப்பி சென்றனர். தகவலறிந்து ஊதியூர் போலீசார் வந்து மருதமுத்துவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வல்பூரான், கார்த்திக், பிரகாஷ், முத்துக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
