சென்னை: 3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் 11 சிறுமிகளுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது சம்பவம் பெண்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி வந்த கடந்த மே 10ம் தேதி முதலே தினம் தினம் பாலியல் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்துக்கு மக்கள் கொந்தளித்து உள்ள நிலையில், அடுத்தடுத்து 10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனியை சேர்ந்தவர் நந்தகுமார் (25). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார். அப்போது நந்தகுமார், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவியின் தாயார், ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அந்த அதிரடிப்படையினர், நந்தகுமாரை கைது செய்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் குடும்பத்திற்கு சரவணன் நன்கு அறிமுகமானவர். அதனால் சரவணனை மாமா என்று சிறுமி அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து அழுதபடி சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார்.
அவரிடம், ‘எதற்காக அழுகிறாய்’ என்று பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘என்னிடம் சரவணன் மாமா பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சரவணனை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சரவணன் மற்றும் சிறுமியிடம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதில், சரவணன் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே ஆதனூர் கிராமத்தில் பெற்றோருடன், 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நடந்து வரும் கட்டுமான பணிகளில் கூலி வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், இப்பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று ெகாண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்தபடி பீகாரை சேர்ந்த ஜெய் சாந்த் (43) என்பவரும் சென்றார். பின்னர் திடீரென சிறுமியின் வாயை கையால் பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கூச்சலிட்ட சிறுமி, அந்த நபரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிவந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, ஜெய் சாந்த்தை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மணிமங்கலம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மணிமங்கலம் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான போலீசார், ஜெய்சாந்தை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்: பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயதுக்காரருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் டியூஷன் முடித்து வீட்டிற்கு செல்லும்போது பைக்கில் வந்த ஒருவர் திடீரென சிறுமியை பின்தொடர்ந்து வந்து சைகை மூலம் செல்போன் நம்பர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவி, அந்த நபரை திட்டிவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகு வீட்டுக்கு வந்து தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு காவல் மாவட்ட சிங்கப்பெண் உதவி ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்திவிட்டு மாணவியின் தந்தையிடம் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை திருவிக நகர் இன்ஸ்பெக்டரின் தலைமையிலான தனிப்படை போலீசார், பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 2வது தெருவை சேர்ந்த முகேஷ் (23) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூர்: செங்குன்றம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு, தனது வீட்டின் அருகே உள்ள 16 வயது சிறுமியுடன், நேற்றுமுன்தினம் காலை வெளியே சென்றார். இருப்பினும், வெகு நேரமாகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்ப வில்லை. எனவே இவர்களது பெற்றோர், அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமிகளின் மொபைல் போன் சிக்னலை வைத்து, இருவரும் அண்ணா சாலையில் உள்ள விடுதியில் இருப்பதை போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்ற போலீசார், சிறுமிகளுடன் இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதில், அம்பத்தூரைச் சேர்ந்த மனோஜ் (20) மற்றும் ராஜா (20) என தெரிந்தது. மேலும், வாலிபர்கள் இருவரும் சிறுமிகளிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிந்தது. இதையடுத்து, மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, மனோஜ் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்தவர் அருள்ராஜ் (66). இவர், டவுன் பகுதியில் உள்ள சர்ச்சில் உபதேசியாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சர்ச்சுக்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தெரியவந்த சிறுமியின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முதியவர் அருள்ராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. சில தினங்களுக்கு முன் இவரது பெற்றோர் வெளியே செல்லவே, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தினேஷ்குமார்(31), சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழுதார். உடனே தினேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். பெற்றோர் திரும்பி வந்ததும் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தினேஷ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான தினேஷ்குமார் தனியார் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வந்தார். திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சோழக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (20). இவர், தற்போது நாமக்கல் மாவட்டம் பாப்பம்பாளையத்தில் குடியிருந்து, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், ஈரோட்டில் உள்ள டிப்ளமோ கல்லூரியில் படிக்கும்போது, அந்த கல்லூரியில் ஜூனியராக படித்து வந்த 16 வயது மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியை காணவில்லை என பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், மாணவியை தேடி வந்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் ராம்குமார் மாணவியை கடத்தி சென்று, திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராம்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் (20). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் பனியன் நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதேபோல் அவிநாசி ரோடு, காந்தி நகர் அடுத்த சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (66), இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர்.
இவர் உடல்நலக்கோளாறு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டருகில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து 11 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கி 6 நாட்கள் ஆகியும் ஒரு பாலியல் தொல்லை நிகழ்வுகள் கூட தடுக்க முடியாதது பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
3 இளம்பெண்களுக்கும் வன்கொடுமை
கோயம்பேடு: சென்னை கோயம்பேடு பகுதியில் தனது சிறிய தந்தை வீட்டில் தங்கி அவர் நடத்தி வரும் பேக்கேஜி நிறுவனத்தல் 23 வயது இளம் பெண் பணியாற்றி வருகிறார். இளம் பெண் அவரது சிறிய தந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ேநற்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். தூக்கத்தில் இருந்த இளம் பெண் தன் மீது யாரோ படுத்து இருப்பதை உணர்ந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு இளம் பெண்ணின் சிறிய தந்தை தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து சரமாரியாக உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்திய போது, இளம் பெண் தங்கி இருந்த வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் நேபாள நாட்டை சேர்ந்த பிஜயதேவ்யா (26) என தெரியவந்தது. இவர், பல நாட்கள் இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்ததும், பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அதிரடியாக கைது செய்தனர்.
பூந்தமல்லி: போரூரில் குன்றத்தூர் பிரதான சாலையில் பாலமுருகன் கோயில் ஆர்ச் அருகே நேற்று முன்தினம் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போரூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பவரை நேற்று கைது செய்தனர். பிறகு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மாங்காடு: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், எங்கு சென்றாலும் தனியாக சென்று வீட்டிற்கு வருவது வழக்கம். இதை பல நாட்கள் நோட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி தனவேல் (50) என்பவர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் அடிக்கடி பேச்சு கொடுத்தும், சாக்லேட் வாங்கி ெகாடுத்தும் பழகி வந்தார்.
அதன்படி காவலாளி தனவேல், மனநலம் பாதித்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி, தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு வந்ததும், அவரது பெற்றோர் ஆடைகள் கசங்கியும், மிகவும் சோர்வுடன் இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர், இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய போது, காவலாளி தனவேல், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை திட்டமிட்டு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து தனவேலை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
