ராணிப்பேட்டை: ராணிப்ேபட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 2023ல் எனது கணவர் சிஆர்பிஎப் பணியில் இருந்தபோது காலமாகிவிட்டார். கணவரின் வீட்டில், நானும் மாமனார், மாமியாரும் வசித்து வந்தோம். எனது கணவரின் அண்ணன் தமிழ்நாடு காவல் துறையில் பொருளாதார பிரிவு டிஎஸ்பியாக வேலூரில் வேலை செய்து வருகிறார்.
அவர் என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார். கடந்த மே மாதம் எனது மாமியார், கணவரின் சகோதரர் மற்றும் அவரது மனைவி என 3 பேரும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியே போக வற்புறுத்தினர். டிஎஸ்பியாக உள்ள எனது கணவரின் அண்ணன் என்னை வயிற்றில் எட்டி உதைத்து வெளியேற்ற முயன்றார்.
இதுபற்றி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தற்போது நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். எனது கணவரின் சகோதரர் தனது பதவிவை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
