மறுமதிப்பீடு இணையதளம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: டெல்லி போலீசில் சிபிஎஸ்இ புகார்

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு பிந்தைய சேவைகளுக்கான இணையதளம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்காக, விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளில் காணப்படும் சிக்கல்களை சரிபார்ப்பதற்கும், விடைகளை மறுமதிப்பீடு செய்வதற்கும் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டது. கடந்த 2ம் தேதிசெயல்பாட்டுக்கு வந்த இணையதளம் தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்களுக்கு உள்ளானது. இது குறித்து சிபிஎஸ்இ டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது. இன்டெலிஜென்ஸ் ப்யூஷன் மற்றும் ஸ்ட்ராடஜிக் ஆபரேஷன்ஸ் பிரிவிடம் சிபிஎஸ்இ தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு போன்ற சேவைகளை எளிதாக்குதவற்காக கடந்த 2ம் தேதி தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான ஒருங்கிணைந்த சைபர் தாக்குதல்களுக்கு உள்ளானது. எனினும் இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களின் வெளிப்படையான நோக்கம், தளத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பது, உண்மையான பயனர்கள் அணுகுவதை தடுப்பது மற்றும் தேசிய நலனுக்கு எதிரான சக்திகள் மூலம் அங்கீகரிக்கப்படாத வகையில் தகவல்களை திருட முயற்சிப்பது ஆகும். இந்த தாக்குதலின் தன்மையை கருத்தில் கொண்டு விரிவான விசாரணை மற்றும் பொறுப்பானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் இது குறித்து தகவல் தொழில்நுட்பத் சட்டத்தின் 66 மற்றும் 43(எப்)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: