புதுடெல்லி: கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரிமார்ச் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 7 சதவீதமாக இருந்தது.
கடந்த முழு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆண்டின் 7.1 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஈரான் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் சப்ளையில் பாதிப்பு போன்றவை நடப்பு நிதியாண்டில் அடுத்த காலாண்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரத்தில், ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்தநாகேஸ்வரன், 2027-28 நிதியாண்டில் இந்தியா மீண்டும் 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
