கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், படித்த வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் உயர் கல்வி பயின்று வரும் அபிஜித் தீப்கே என்பவர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடக கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். இந்த கட்சிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும், இளைஞர்களும் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இளநிலை நீட் தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறைகேடு ஆகியவற்றில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கவனம் செலுத்த தொடங்கியதுடன், கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் அமைதி போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இந்த அமைதி போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று 6ம் தேதி இந்தியா வர உள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 3ம் தேதி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு புலனாய்வு செய்தியாளர் சவுரவ் தாஸ் , அரசியல் ஆய்வாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான விஜேதா தஹியா மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் ”சேவ் இந்தியா பவுண்டேஷன்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான ஆஜரான வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சௌரப் பானர்ஜி மற்றும் அமித் சர்மா ஆகியோர் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில்,”சனிக்கிழமை(இன்று) டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்ட கூட்டத்தால் டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த போராட்டம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும். எனவே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவே மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உடனே உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து முறையீட்டை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள்,”ஜவஹர்லால் நேரு மற்றும் பிற முக்கியத் தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள டெல்லியில், இப்போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட இந்த மனுவை அவசரமாக பட்டியலட்டு விசாரணை நடத்தி உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: