திருவனந்தபுரம்: மூணாறு வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கவும், இ பாஸ் முறையை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். கோடைகாலங்களில் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வருவதால் இங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் மூணாறில் டோல்கேட் அமைத்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கவும், இ பாஸ் முறையை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூணாறு பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் கூறியது: மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு விட்டுச் செல்லும் குப்பைகளை சேகரித்து மேலாண்மை செய்வதற்காகவே மூணாறு பஞ்சாயத்து வருடத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. சுற்றுலா பயணிகளால் பஞ்சாயத்துக்கு அதிக வருமானம் கிடைப்பதில்லை. எனவே இங்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 இடங்களில் பசுமை டோல்கேட் அமைக்கப்படும்.
டோல்கேட்டில் குப்பைகளை போடுவதற்கு பைகள் வழங்கப்படும். பிளாஸ்டிக், உணவுக் கழிவுகள் ஆகியவற்றை தனித்தனியாக பைகளில் போட்டு திரும்பிச் செல்லும் போது டோல்கேட்டில் திரும்ப கொடுத்து விட வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரும்பாலும் தேவிகுளம் பஞ்சாயத்து பகுதி வழியாகத்தான் வருகின்றன. எனவே தேவிகுளம் பஞ்சாயத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. ஊட்டி, கொடைக்கானல் போல மூணாறு வருவதற்கு இ பாஸ் முறையை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் டோல்கேட் மற்றும் இ பாஸ் முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
