புதுடெல்லி: கிரேட் நிகோபர் திட்டத்துக்கு பதிலாக பசுமையையே தேர்ந்தெடுக்கிறோம் என்று அரசை வலியுறுத்தும் கோரிக்கையில் கையெழுத்திட மக்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேராசைக்கு பதிலாக பசுமையையே நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் என்று வலியுறுத்தும் வகையில் மக்கள் ஒரு மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒவ்வொரு இந்திய இளைஞரிடமும் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் எத்தகைய இந்தியாவை மரபுரிமையாக பெற விரும்புகிறீர்கள்? சூதாட்ட விடுதிகளுக்காக (casinos)மழைக்காடுகள் அழிக்கப்பட்டு, பவளப்பாறைகள் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டு பழங்குடியின சமூகங்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு நாம் சுவாசிக்கும் காற்று விஷமாக மாற்றப்பட்ட இந்தியாவையா? அல்லது இந்தியாவின் இயற்கை பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு பழங்குடியின சமூகங்கள் பாதுகாப்பாக இருந்து இயற்கைக்கு எதிராக இல்லாமல் இயற்கையோடு இணைந்து வளர்ச்சி அடையும் இந்தியாவையா? ஒரு தொழிலதிபருக்கு லாபம் ஈட்டித் தருவதற்காக 1.5கோடிக்கும் அதிகமான மரங்கள், பழமையான பவளப்பாறைகள் மற்றும் ஈடு இணையற்ற மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
