கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதம் வண்டி ஓட்ட முடியாது: போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டனை கடுமையாகிறது

திருவனந்தபுரம்: கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்கள் மோட்டார் போக்குவரத்து துறையின் ஒரு நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்சுகளுக்கு வழி விடாவிட்டால் 6 மாதங்களுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்களும் ஒரு நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். குடிபோதையிலும், அபாயகரமான வகையிலும் வாகனம் ஓட்டுவது மற்றும் ரேசிங்கில் ஈடுபட்டால் 6 மாதங்கள் வரை லைசென்ஸ் முடக்கப்படும். இதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டால் 1 வருடத்திற்கு லைசென்ஸ் இடைநீக்கம் செய்யப்படும். இவர்கள் 3 நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் 3 மாதங்களுக்கு லைசென்ஸ் முடக்கம் செய்யப்படும்.

இவர்களுக்கு 3 நாள் கட்டாய பயிற்சியும் வழங்கப்படும். அலட்சியமாகவோ, குடிபோதையிலோ வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்பட்டால் 1 வருடத்திற்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும். மேலும் இவர்கள் 5 நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: