5.25 சதவீதமாக நீடிப்பு; குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி, 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக இந்திய பொருளாதாரத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை, கெமிக்கல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விலை அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 5.25 சதவீதமாகவே நீடிக்கிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் 3.7 சதவீதமாக இருந்தது. சில்லரை விலை பண வீக்கம் நடப்பு நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு கணித்திருந்ததை விட அரை சதவீதம் அதிகமாகும். இதுபோல், நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த கூட்டத்திலும் ரெப்டோ வட்டி விகிதத்தை மாற்றவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் கால் சவீதம் குறைத்து 5.25 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. தற்போதும் இதுவே நீடிக்கிறது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் வட்டி, இஎம்ஐயில் மாற்றம் இருக்காது. இதுபோல் டெபாசிட் வட்டி விகிதங்களிலும் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு;
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ரூ.10 மதிப்பில் 100 கோடி பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சிடப்பட்டு கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் முதற் கட்டமாக புழக்கத்துக்கு விடப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகவும், இந்த முடிவு ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாகவும் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். ரொக்க பரிவர்த்தனை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி இதனை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: